சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்

 
க்ரைம்

தேனி சிறை சம்பவத்தில் நடவடிக்கையும், தேடுதல் வேட்டையும்: சிறைத் துறை டிஜிபி விளக்கம்

சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தேனி மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கைதிகளில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டச் சிறைச்சாலை கடந்த 2019 ஜனவரி 10-ம் தேதி முதல் தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சிறையில் 200 கைதிகளை அடைத்து வைக்க அனுமதி உள்ள நிலையில், நேற்று (அக்.26) மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு சுமார் 10 மணியளவில், 3-வது பிளாக்கில் உள்ள கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாக சில கைதிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 2-ம் நிலை காவலர் ஸ்டாலின் பிரபு, அந்தக் கைதிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த கைதிகள் அவரை தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு, சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால், கைதிகள் தடுக்க முயன்ற காவலர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த சாவிகளை பறித்துள்ளனர். பின்னர் பிரதான நுழைவாயிலை திறந்து கொண்டு 17 கைதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.

முதல் கட்டமாக தப்பி ஓடிய பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்கபிரசாத் ஆகிய 5 பேர் பிடிக்கப்பட்டனர். தற்போது வரை 10-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளனார். மற்றவர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

9 பேர் பணியிடை நீக்கம்: கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக தேனி மாவட்டச் சிறைச் சாலையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT