க்ரைம்

குன்றத்தூர் காவலர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயற்சி

ஆய்வாளர் விடுமுறை தராததால் விபரீதம்

செய்திப்பிரிவு

குன்றத்தூர், மேத்தா நகரில் வசிப்பவர் ஏகநாத் (33). இவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி பிருந்தா (30) ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என, ஆய்வாளர் வேலுவிடம், ஏகநாத் கேட்டுள்ளார். பூந்தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் சிவகார்த்தி கேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீடு விழா மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் உள்ளது. இதற்கு பாதுகாப்பு பணி உள்ளதால் அந்த விழாக்கள் முடிந்த பின்பு விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு ஆய்வாளர் வேலு கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த ஏகநாத்,தனது வீட்டிற்கு சென்றார்.

பின்னர், இரவு கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிருந்தா, இதுகுறித்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுப்பு கிடைக்காத விரக்தியில் காவலர் ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT