

ராமபிரானிடம் முறைதவறி நடக்க முற்பட்டவள் சூர்ப்பனகை என்று எழுதப்பட்ட கட்டுரை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. இதிகாசக் கதைமாந்தர்களை முன்வைத்துப் பெண்கள் மீது, குறிப்பாகப் பெண்ணியம் பேசும் பெண்கள் மீது ஆண்களால் படுவன்மமாக வீசப்படுகிற கூராயுதங்கள் பல. அவற்றுள், ‘அவள் பாஞ்சாலிடா, மூக்கறுபட்ட சூர்ப்பனகைடா, இவ பெரிய சீதை, அவ பெரிய கண்ணகி’ என்று வன்மமாகப் பேசுவதும் எழுதுவதும் ஒரு வகை.
பெண்ணியவாதிகளை நேரடியாக எதிர்க்கும் துணிச்சல் கைவராமையால் இதிகாசக் காலக் கதைமாந்தர்களை எடுத்துக்காட்டி இந்தக் காலப் பெண்களுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் வகை இது. நிஜத்தை விடுத்து நிழலைத் தாக்குவது. இது ஒரு வகையான பெண்ணிய எதிர்ப்பு உத்தி.
பெண்களுக்கான ‘சிறப்பு’ச் சட்டங்கள்: ஒரு பெண் தன் காதலைச் சொல்லாலும் சொல்லக் கூடாது. ஆனால், ஆண் எவ்விதத் தயக்கமும் இன்றிச் செயலிலே இறங்கிவிடலாம். காதல் கொண்ட பெண் தனக்குப் பிடித்தவன் முன்பு தலை குனிந்து, கால் கட்டை விரலால் கோலம் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும். ஆணோ பெண்ணின் முன் இரட்டைப் பொருள்படும் வசனங்களைப் பேசலாம்.
அவன் பார்க்காத போதுதான் பெண் அவனைப் பார்க்க வேண்டும். ஆண், அங்கம் கூசும் அளவுக்கு அவளை வைத்த கண் எடுக்காமல் முறைத்துப் பார்க்கலாம். பெண்ணை ஆண் கேலி செய்து சிரிக்கலாம். ஆணைப் பெண் கேலி செய்து சிரித்தால், யுகங்கள் கடந்து பேசும் அளவில் அவளை அவையில் வைத்துத் துகிலுரிந்து அவமானப்படுத்தலாம். பெண்ணை ஆண் நிராகரித்தாலும் ஆணைப்பெண் நிராகரித்தாலும் அரிவாள் வெட்டு, ஆசிட்வீச்சு. இவையெல்லாம் காலம் காலமாகப் பெண்களுக்காக ஆண்கள் எழுதியுள்ள சிறப்புச் சட்டங்கள்.