முகம்மது சதாம் உசேன்
சென்னை: தாம்பரம் அருகே முக்கிய ரவுடி போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் முகம்மது சதாம் உசேன் (29). ‘ஏ’ பிளஸ் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை, அடிதடி, திருட்டு உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றங்களில் சரிவர ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 2 வழக்குகளில் இவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
காட்டில் பதுங்கல்
இதையடுத்து இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தாம்பரம் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டிருந்தார். எனவே சதாம் உசேனைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைநடத்தப்பட்டது.
இந்நிலையில் அவர் மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கரசங்கால் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிமங்கலம் காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையிலான தனிப்படை போலீஸார் காலை 5.15 மணியளவில் அங்கு சென்று சதாம் உசேனை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் பட்டாக் கத்தியால் போலீஸாரை வெட்டினார்.
போலீஸார் அந்த தாக்குதலில் இருந்து விலகி அவரை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால் அவர் தப்பியோட முயற்சி செய்தார். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார் சதாம் உசேனின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் இடது முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை போலீஸார் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
20 கிலோ கஞ்சா பறிமுதல்
மேலும் அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக் கத்திகள், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சம்பவ இடம் விரைந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். முகமது சதாம் உசேன் 2022-ம் ஆண்டு மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை போலீஸார் சுட்டுப் பிடித்திருப்பது ரவுடிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.