படங்கள்: குரு பிரசாத்

க்ரைம்

சேலத்தில் பெண் கொடூர கொலை: தண்ணீர் தொட்டியில் சடலம் மீட்பு

வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் துண்டு துண்டாக பெண்ணின் உடலை வெட்டி வீட்டின் மொட்டை மாடி குடிநீர் தொட்டியில் வீசிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருபவர் பூசாரி ரமேஷ். இவர் குடும்பத்துடன் தஞ்சாவூர், கும்பகோணம் சென்று நேற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை வீட்டின் குடிநீர் குழாயை திறந்தபோது தண்ணீரில் துர்நாற்றம் வந்துள்ளது.

உடனடியாக ரமேஷ், மகனுடன் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று, அங்குள்ள குடிநீர் தொட்டிக்குள் பார்த்தபோது இரண்டு மூட்டைகள் இருந்துள்ளன. இது குறித்து தகவல் கொடுத்ததின் அடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து குடிநீர் தொட்டியில் இருந்து மூட்டைகளை வெளியில் எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, ஒரு மூட்டையில் கை, கால்களும், மற்றொரு மூட்டையில் தலை மற்றும் மார்பு பகுதியும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. அதேபோல, அருகிலிருந்த மற்றொரு வீட்டின் தண்ணீர் தொட்டி பகுதியில் சடலத்தின் இடுப்பு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். கையில் “கணபதி” என்ற பெயருடன் விநாயகர் பச்சை குத்தப்பட்டுள்ளது அந்தப் பெண் யார்? கொலைக்கான காரணம் என்ன? என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT