மீனாட்சி, நிஷாந்த்
மதுரை: மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் இளைஞரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். எஞ்சிய நகைகளை மீட்க வயல்வெளிகளில் போலீஸார் 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், மதுரை விகேபி நகர் அருட்பெருஞ் ஜோதி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் மகனும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான நிஷாந்த் (23) ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளைக்கு உடந்தையாக இருந்த நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் தோழியான மதுரை திருப்பாலையைச் சேர்ந்த மீனாட்சியை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகியோரிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து மலையடிவார புதருக்குள் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ நகைகளை மீனாட்சியை அழைத்துச் சென்று போலீஸார் மீட்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இன்ஸ்டாவில் பிரபலமான நிஷாந்தின் நண்பர்கள், தோழிகளின் செல்போன்களையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். நிஷாந்தை தேடி திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர். ஓரிரு நாட்களில் அவரைப் பிடித்து விடுவோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர். கொள்ளைபோன எஞ்சிய நகைகளை மீட்க 2-வது நாளாக நேற்று மாடக்குளம் கண்மாய், அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் எதுவும் சிக்கவில்லை.
தோழிக்காக கொள்ளை: போலீஸார் கூறியதாவது: தோழி மீனாட்சியின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மெகா கொள்ளையை நிஷாந்த் நிகழ்த்தி உள்ளார். அவரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது கொள்ளைக்கு முன்பும், பின்பும் அவர் மீனாட்சியுடன்தான் அதிக நேரம் பேசியுள்ளார். மீனாட்சியின் இரு சக்கர வாகனத்தை நிஷாந்த் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொள்ளையின் பின்னணியில், வேறு சிலரும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
நிஷாந்தை பிடித்தால் மட்டுமே கொள்ளைச் சம்பவத்தின் முழு பின்னணியும் தெரிய வரும். நிஷாந்த் செல்போன் எண்ணை அடிக்கடி மாற்றுவதால் இருப்பிடத்தைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் விரைவில் கைது செய்துவிடுவோம். கைது செய்யப்பட்ட நிஷாந்த் தந்தை சுரேஷ், அவனது தோழி மீனாட்சியை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு கூறினர்.