சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்து விடுவதாக மிரட்டி, தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர் மற்றும் உடந்தையாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ சீனிவாசன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அகில்குமார். தொழிலதிபரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் புகாரி என்னை அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மொட்டை கிருஷ்ணன் பயன்படுத்திய செல்போன் எண் ஆய்வில், எனது பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, வழக்கில் என்னையும் சேர்த்து கைது செய்து விடுவதாக மிரட்டினார்.
அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அச்சத்தில் அந்த தொகையை வழங்கினேன். கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி பலமுறை புகாரி பணம் பறித்தார்.
அவர் பரங்கிமலை காவல் ஆய்வாளராக உள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு வந்து, போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்தி, மீண்டும் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினார்.
அதன்படி பணத்தை தயார் செய்து யானைகவுனி காவல் நிலையம் அருகே கொண்டு சென்று கொடுத்தேன். எனவே, தொடர்ந்து என்னை மிரட்டி பணம் பறித்து வரும் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, பூக்கடை காவல் துணை ஆணையர் கோபி தலைமையில் நடத்தப்பட்ட துறைரீதியான விசாரணையில், புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து, புகாரி மீது யானைகவுனி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதோடு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ சீனிவாசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் புகாரியுடன் தொடர்புடைய வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கையை காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆய்வாளர் சரவணன் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் பணியாற்றிய போது தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி கடத்தி சென்று அவரது சொத்துக்களை அபகரித்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.