உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

எதிர்க்கட்சிகளை முடக்கும் செயல் என கருத்து
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அவரை இந்த அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசின் போக்கு கண்டனத்துக்குரியது.

தேமுதிக பொதுச்செய லாளர் பிரேமலதா: கருத்துக்கு கருத்தால் பதிலளிப் பதே ஜனநாயகத்தின் மாண்பாகும். கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. ஆங்கிலேயர் காலத்தில் வாய்ப்பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பாமக தலைவர் அன்புமணி: முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக் கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட் டிருக்க வேண்டும்.

அமமுக பொதுச்செய லாளர் டிடிவி தினகரன்: தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை யும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதைப் பார்க்க வேண்டியுள்ளது.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காவிரி நதி நீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய தவ்ஹீத் ஜமா அத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: தவெக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in