உயிரிழந்த காவலர் தினேஷ்குமார்

 
க்ரைம்

செங்கல்பட்டில் கார் மோதி காவலர் உயிரிழப்பு; சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு போலீஸார் வலை

பெ.ஜேம்ஸ்குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நடந்த இரு கார் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முதல் விபத்தில் மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மற்றொரு கார் மோதியதில் காவலர் தினேஷ்குமார் (24) உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தீனா (33) தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ஒவர்டன்பேட்டை பகுதியில் செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் நேற்று இரவு வெள்ளை நிற மாருதி கார் ஒன்று செங்கல்பட்டு நோக்கிச் சென்றது. பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் முறிந்ததால் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மற்ற வாகன ஓட்டிகள் மீட்டபோது, ஓட்டுநர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் இருந்தவர்கள், தங்களை போலீஸார் எனக் கூறி, விபத்து குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தாலுகா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுரேஷ்குமார் (54), தினேஷ்குமார் (24) ஆகியோர் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மற்றொரு ஸ்விஃப்ட் கார், பணியில் இருந்த போலீஸார் மீது மோதியது. இதில் தினேஷ்குமாருக்குத் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுரேஷ்குமார் லேசான காயமடைந்தார்.

இருவரையும் மீட்ட வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் சுரேஷ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், போலீஸார் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தீனா (33) என்பது தெரியவந்தது. இவர் மீது மறைமலைநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பின்னர் தீனா தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் காவலர் உயிரிழந்த சம்பவம் போலீஸார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT