பிப்பின் மான்ஜி
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை - புதுப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த பிஹார் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அங்குள்ள முட்புதரில் வீசப்பட்டிருந்தது.
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை கடந்த 15-ம் தேதி காலை உயிரிழந்தது.
இதுதொடர்பாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், போக்சோ, கொலை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ், புதுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்த பிஹாரைச் சேர்ந்த பிப்பின் மான்ஜியை (19) கைது செய்து, கடந்த 15-ம் தேதி இரவு, பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது, ஜூன் 29-ம் தேதிவரை பிப்பின் மான்ஜியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பிப்பின் மான்ஜி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி உமா மகேஸ்வரி, பிப்பின் மான்ஜியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து நேற்று இரவு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் பிப்பின் மான்ஜியை ஆஜர்படுத்திய போலீஸார், நீதிபதியின் உத்தரவின் பேரில் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.