சென்னை: காதலன் வீட்டில் பிசியோதெரபி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார் (26). மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரும் நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த பூஜா (24) என்ற பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பூஜா தனியார் கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வந்தார். அடிக்கடி காதலன் வீட்டுக்கு சென்று வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினமும் ஹரிஷ் குமார் வீட்டுக்கு பூஜா சென்றுள்ளார். அப்போது திருமணம் செய்துகொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த பூஜா, ஹரிஷ் குமார் வீட்டின் அறை ஒன்றுக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த, ஹரிஷ் குமார் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பூஜா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
உடனடியாக அவர் கதவை உடைத்து உள்ளே சென்று, மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள் பூஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சூளைமேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரித்தனர். மேலும், திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பூஜா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஹரிஷ் குமார் தாக்கி உயிரிழந்தாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.