க்ரைம்

திண்டுக்கல் அருகே இரு வீட்டார் மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இரு வீட்டார் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த போஸ் மனைவி சைனி(40).

இவரது வீட்டின் முன் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து மின் கம்பத்தில் வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி. சங்கர், இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின், வீட்டின் ஜன்னல் வழியாக சைனி உறங்குவதை எட்டிப் பார்த்ததால், இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராபின்(29), அவரது தம்பி சூர்யா ஆகியோர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தீ வைத்து சைனி வீட்டின் மீது வீசியுள்ளனர்.

அது அருகேயுள்ள மின் கம்பத்தில் பட்டு சிதறியது. இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராபின்(26), சவேரியார்பாளையம் செல்வகுமார்(26), வெங்கட கிருஷ்ணன்(29) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். சூர்யாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT