சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஆயுதப்படை தலைமையகத்தில் அலுவலக உதவியாளரை பெண் டிஐஜி தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமான பிரிவுகளில் ஒன்று ஆயுதப்படை. கலவரம், அசாதாரண சூழல் அல்லது வன்முறை ஏற்படும் நேரங்களில் அவற்றை ஒடுக்க இந்த படை பயன்படுத்தப்படுகிறது.
மேலும், விஐபிக்கள் வருகை, திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், கைதிகளை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சட்டம்-ஒழுங்கு பணியில் போலீஸாருக்கு உதவியாக செயல்படுதல் உட்பட பல்வேறு பணிகளை ஆயுதப்படை பிரிவு போலீஸார் மேற்கொள்கின்றனர். இப்பிரிவின் தலைமை அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது.
இங்கு டிஐஜி-யாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளார். அவர் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை போலீஸ் உயர் அதிகாரிகள் மிக முக்கியப் பணிகளில் அமர்த்தாமல் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்ற அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
கோப்புகளை வீசி
இவர் பணியில் இருந்தபோது, கோப்பில் கையெழுத்து வாங்க வந்த அலுவலக ஆண் உதவியாளர் (அமைச்சுப் பணியாளர்) ஒருவரது செயல் பெண் டிஐஜி-க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாம்.
இதனால், கோபம் அடைந்த பெண் டிஐஜி, அலுவலக உதவியாளர் மீது கோப்புகளை வீசி எறிந்ததாகவும், காலணியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த அலுவலக உதவியாளர் அவரது சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, டிஜிபி-யிடம் இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் தனித்தனியாக உத்தரவிட்டுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.