செங்குன்றம்: தாயம் விளையாட்டு தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள சின்னமாத்தூரை சேர்ந்த ராமராஜ் (35 ), ராஜா (52), பெருமாள் (43), ஞானம், மணலியை சேர்ந்த முரளிதரன்(35), லோகநாதன் என்கிற பட்டு (32) ஆகியோர் நேற்று முன்தினம் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. பின்னர் 6 பேரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரவு சின்னமாத்தூர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு எதிரே ராமராஜ், ராஜா, பெருமாள் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த முரளிதரன், லோகநாதன் ஆகியோர், ராமராஜ் உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முரளிதரனும், லோகநாதனும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமராஜ், ராஜா, பெருமாள் ஆகியோரை வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்; பெருமாள், ராஜா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை போலீஸார், ராமராஜின் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து முரளிதரன், லோகநாதன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.