பெருங்களத்தூர்: பெருங்களத்தூர் விவேக் நகரைச் சேர்ந்த சத்யா (21), வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணிக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து தனியார் செயலி மூலம் இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் நின்றதால், சத்யா நடந்தே பெருங்களத்தூர் ரயில் நிலையம் வரை சென்றுள்ளார். அங்கிருந்து பணிக்குச் செல்வதற்காக அங்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் ஏறியுள்ளார். வழியில் சிறிது தூரத்தில் 4 பேர் அந்த ஆட்டோவில் ஏறியுள்ளனர். அவர்கள் சத்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த அவர், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் இடது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடபழனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த பீர்க்கங்காரணை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் உதவி ஆணையர் வைஷ்ணவி, மருத்துவமனைக்குச் சென்று சத்யாவிடம் நேரில் விசாரணை நடத்தினார். ஆட்டோ மற்றும் அதில் பயணித்ததாகக் கூறப்படும் நப்ர கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.