கோவை காரமடை அருகே ஆதிமாதையனூர் பகுதியில் குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்

 
க்ரைம்

கோவை அருகே குட்டையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற தாய், சகோதரி உயிரிழப்பு

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை அருகே காரமடையில் குட்டையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற தாய், சகோதரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜாமணி (50). இவரது மகள் விக்னேஸ்வரி (35), மகன் சரவணகுமார் (30). விக்னேஷ்வரிக்கு திருமணமாகி சென்னையில் கணவர், இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ராஜாமணியின் வீட்டருகே விவசாய நிலம் உள்ளது. அங்கு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்காக, அப்பகுதியி்ல் 12 அடி ஆழத்தில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய பாசன வசதிக்கு இக்குட்டையில் இருந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ்வரி விடுமுறைக்காக சென்னையில் இருந்து மகள்களுடன் கோவை ஆதிமாதையனூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆக.21) மதியம் சுமார் 2 மணியளவில் சரவணக்குமார் குளிப்பதற்காக பண்ணைக் குட்டையில் இறங்கியுள்ளார். குளித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் சரவணக்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த சரவணக்குமார் தன்னைக் காப்பாற்றக் கோரி கூச்சலிட்டு்ள்ளார். மகனின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த தாய் ராஜாமணி, சரவணக்குமாரை மீட்க அவரை நோக்கி கையை நீட்டியுள்ளார். அப்போது, ராஜாமணியும் தண்ணீரில் தவறி விழுந்தார். தாய் மற்றும் சகோதரரின் கூச்சல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் விக்னேஷ்வரி இருவரையும் மீட்க முயன்றபோது அவரும் குட்டையில் விழுந்துள்ளார்.

இதற்கிடையே, விக்னேஷ்வரி மகள்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள விவசாய நிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கு வந்து குட்டையில் சிக்கிய மூவரையும் மீட்டனர்.

மேலும், ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குட்டையில் மூழ்கிய தாய் ராஜாமணி, மகள் விக்னேஷ்வரி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.

மகன் சரவணக்குமார் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காரமடை போலீஸார், உயிரிழந்த ராஜாமணி, விக்னேஷ்வரி சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டு்ப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய், சகோதரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT