சிவஞானம் மற்றும் அவரது தாய் எஸ்தர் பாலின்.

 
க்ரைம்

காதலை கைவிடாததால் கயத்தாறில் இளம்பெண்ணை கொலை செய்த தாய், சகோதரர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞரை காதலித்ததால், இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தாய், சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மனைவி எஸ்தர் பாலின் (36), கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது, 18 வயது மகள் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி இரவு எஸ்தர் பாலினின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கயத்தாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து, இளம் பெண்ணின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடந்த விசாரணையில் இளம் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த இளைஞரை, இப்பெண் காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகிவந்துள்ளனர்.

ஆத்திரமடைந்த சகோதரர் சிவஞானம் (20) கடுமையாக தாக்கியதில் அந்த இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவஞானத்தையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் எஸ்தர் பாலினையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்ததால், குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இச்சம்பவம் ஆணவக் கொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை. சமூக வலைதளங்களில் ஆணவக் கொலை என பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை ஆகும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT