சென்னை: ஆந்திர தம்பதிக்கு பெண் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா (19). இவரது கணவர் ‘குள்ள’ கணேஷ், குற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சிறைசெல்லும் முன் மீண்டும் கர்ப்பமான பவித்ரா, வறுமையில் தவித்துள்ளார். இதை பயன்படுத்திக்
கொண்ட அயனாவரத்தைச் சேர்ந்த ஆண்டாள் (64), தனலட்சுமி (26) ஆகிய இடைத்தரகர்கள், "குழந்தை இல்லாத ஆந்திரத் தம்பதிக்குக் குழந்தையைக் கொடுத்தால் ரூ.4 லட்சம் தருவார்கள். பிரசவச் செலவையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்" என ஆசை காட்டியுள்ளனர்.
இதையடுத்து வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணிபுரியும் துர்கா (43) என்பவரைச் சந்தித்து, இந்த விவகாரத்தை ரகசியமாக முடிக்குமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மறுநாளே ஆந்திரத் தம்பதியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு ரூ.4 லட்சத்தை பெற்றனர். இதில் வரவேற்பாளர் துர்கா மற்றும் ஆண்டாளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கமிஷனாகத் கொடுக்கப்பட்டது.
ஆனால், மற்றொரு இடைத்தரகரான தனலட்சுமிக்கு கமிஷன் தராமல் பவித்ரா ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி, குழந்தை விற்பனை விவகாரத்தை கசியவிட, விஷயம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, சமூகப் பணியாளர் மலர்விழி அளித்த புகாரின் பேரில், வில்லிவாக்கம் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்டமாக தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் ஆண்டாள், தனலட்சுமி மற்றும் வரவேற்பாளர் துர்கா ஆகிய 4 பேரையும் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை போலீஸார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த கும்பல் இதற்கு முன்பும் இதுபோல குழந்தைகளை விற்பனை செய்துள்ளதா? இதில் மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விற்பனை விவகாரத்தில் 2 மருத்துவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.