சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் (27). சென்னை சிந்தாதிரிப்பேட்டை அத்திப்பட்டான் தெருவில் உள்ள கடையின் 3-வது மாடியில் தனது தம்பியுடன் இணைந்து செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வந்து, அசோக்கிடம் செல்போன்கள் வாங்குவதாக கூறி ஏமாற்றி, காரில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தினர்.
“உனது தம்பிக்கு கடனாக கொடுத்த ரூ.10 லட்சம் பணத்துக்கு நீதான் பொறுப்பு. நீதான் அந்தப் பணத்தை தர வேண்டும்” எனக்கூறி அசோக்கை தாக்கினர்.
இந்நிலையில் அண்ணாநகர் வி.ஆர். ஷாப்பிங் மால் அருகே கார் சென்ற போது, அசோக், காரில் இருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பினார். பின்னர் இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நண்பர்களுடன் வந்து அசோக்கை கடத்தி, தாக்கியது சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்த சேதுராமன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சேதுராமன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.