

சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கோரிக்கையை ஆராய உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும் என்று வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு, இந்திய வங்கிகள் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கத் தனியாகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கவுள்ளன.
வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடுதழுவிய அளவில் செப்.28-ம் தேதி முதல் செப்.30-ம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில், புதுடெல்லியில் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் முடிவில், வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை ஆராய்வதற்காக, இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு உள்ளடக்கிய ஒரு உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும். இக்குழு சாத்தியமான அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உருவாக்கும்.
பிஎல்ஐ திட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைப்பது குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம்.
இதர கோரிக்கைகள் தொடர்பாக விரைவான தீர்வை எட்டுவதற்காக, இரு தரப்பினருக்கும் இடையே விவாதிக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் கூறியதாவது: ஐடிபிஐ வங்கியை வெளிநாட்டு மயமாக்குவதை நிறுத்துவது மற்றும் வாரத்தில் 5 நாட்கள் வங்கி வேலை நாட்கள் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரி, எங்களது சங்கம் செப்.25-ம் தேதி பிரதமரிடம் முறையிட்டது.
இப்பிரச்னைகளுக்கு ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வை எட்ட, வங்கி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு உயர்மட்டக் குழுவை (High-Power Committee) அமைக்க நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
இதைத்தொடர்ந்து, சில முக்கிய முன்னேற்றங்களின் பின்னணியில், தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து விவாதித்து, விரைவான தீர்வு காண உறுதியளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வங்கிகள் நேற்று வழக்கம்போல செயல்பட்டதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல், பணம் வைப்பு, காசோலை பரிவர்த்தனை, கடன் வசதி உள்பட பல்வேறு வங்கி சேவைகளை பெற்றனர்.