க்ரைம்

அண்​ணாநகரில் 4 வயது சிறுமி கடத்​தல்? - ​விபத்தில் சிக்​கிய இளைஞரிடம் போலீ​ஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்​ணாநகர் 3-வது அவென்யூ பகு​தி​யில் சாலை​யோரம் வசிக்​கும் தம்​ப​தி​யினரின் 4 வயது பெண் குழந்தை, அப்​பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் கடை அருகே நேற்று முன்​தினம் நின்று கொண்​டிருந்​தது. அப்​போது, டாஸ்​மாக் கடையில் மது அருந்​தி​விட்டு வெளியே வந்த இளைஞர் ஒரு​வர் சிறுமி​யிடம், “இங்கு நிற்​கக் கூடாது; உன்னை பெற்​றோரிடம் அழைத்​துச் செல்​கிறேன்” என கூறி, தனது இருசக்கர வாக​னத்​தில் ஏற்றி அழைத்​துச் சென்​றுள்​ளார்.

இருசக்கர வாக​னம் வேறு திசை​யில் செல்​வதை கண்டு குழந்தை அதிர்ச்​சி​யடைந்​துள்​ளது. இந்​நிலை​யில், அண்​ணாநகர் ஐஏஎஸ்​ அதி​காரி​கள் அகாடமி அருகே சென்று கொண்​டிருந்​த​போது, கட்டுப்​பாட்டை இழந்த இருசக்கர வாக​னம் திடீரென விபத்துக்குள்​ளானது. இதில் பைக்கை ஓட்​டிச் சென்ற இளைஞருக்கு பலத்த காய​மும், சிறுமிக்கு லேசான காய​மும் ஏற்பட்​டது. விபத்​தைக் கண்டு ஓடிவந்த அப்​பகுதி பொது​மக்​கள் சிறுமியை மீட்டு விசா​ரணை நடத்​தினர்.

அப்​போது, அந்த இளைஞர் குழந்​தையை பெற்​றோரிடம் அழைத்துச் செல்​வ​தாக கூறி​யுள்​ளார். ஆனால், அக்​குழந்தை “இவர் யார் என்றே எனக்​குத் தெரி​யாது, ஏமாற்றி அழைத்து வந்தார்” என கூறியது. இதைக்​கேட்டு அதிர்ச்சி அடைந்த பொது​மக்​கள் உடனடி​யாக காவல்​துறை​யினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்​துக்கு வந்த அண்​ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறை​யினர், குழந்​தையை பாது​காப்​பாக மீட்​டனர்.

விசா​ரணை​யில், குழந்​தையை அழைத்​துச் சென்​றவர் நொளம்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த ரவீந்​திர​நாத் (26) என்​பது தெரிய​வந்​தது. காயமடைந்த ரவீந்​திர​நாத்தை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்துவமனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​துள்ள போலீ​ஸார், அவர் சிறுமியைக் கடத்​திச் செல்ல திட்​ட​மிட்​டாரா என்ற கோணத்தில் தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT