மதுரை / திருவண்ணாமலை: மதுரை மாவட்டம் திருமங்கலத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலும் 13 மற்றும் 14 வயது சிறுமிகளை கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 6 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுமிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. திருமங்கலத்தில் நடந்த கோயில் திருவிழாவையொட்டி, குண்டாற்றங்கரையில் பொருட்காட்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பொருட்காட்சிக்கு சிறுமியை சிறுவன் அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுடன் சிறுவனின் 3 நண்பர்களும் சென்றுள்ளனர். பொருட்காட்சியைச் சுற்றிப்பார்த்த அவர்கள், அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்தச் சிறுமியை அவர்கள் கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சிறுமியின் நண்பர் உட்பட 16 வயது சிறார்கள் 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும், அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதானா என்பது குறித்து அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திருமங்கலம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்திலும் சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தவறான புகைப்படம்: இந்த கிராமத்தைச் சேர்ந்த14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சிறுவன் காதலித்து வந்த சிறுமியுடன் இணைந்து இருப்பது போன்று தவறான ஒரு புகைப்படத்தைத் தனது 15 வயது நண்பனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
பின்னர், அந்த படத்தைச் சிறுமியிடம் காண்பித்த இருவரும் சிறுமியை மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் இவர்களது பாலியல் வன்கொடுமை தாங்க முடியாமல் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் இருவரையும் கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.