கைது செய்யப்பட்ட மேலூர் தம்பதி ரஞ்சித், பிரியதர்ஷினி.
மதுரை: ஆன்லைன் முதலீடு மோசடி விவகாரத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட மேலூர் தம்பதியை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.
இணைய வழியில் (எப்க்யூஎல், வி.ஜி.) எனும் இரு செயலிகள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் எனும் பெயரில் 45 நாட்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என ஆசையைத் தூண்டி ஆயிரக்கணக்கான மக்களிடம் முதலீடுகளை பெற்று கோடிக்கணக்கில் மோசடி நடந்தது.
இதில், மேலூர் அருகிலுள்ள கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது தம்பி அருண் ஆகியோர் முகவர்களை நியமித்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக மேலூர் பகுதியில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் இதுவரை ரஞ்சித்தின் உறவினர்கள், முகவர்கள் என 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ரஞ்சித், அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் நேற்று மாலை திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
அங்கு சென்ற மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவர்களை கைது செய்து மதுரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.