சிறுவன் முத்துவேலன்
மதுரை: மதுரை மேலூர் அருகே வெளியே விளையாடப் போன 7 வயது சிறுவனின் உடல் பாழடைந்த வீட்டுக்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டது. அச்சிறுவன் கொலை செய்யப்பட்டானா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மதுரை மேலூர் அருகே தணியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற மகன் இருந்தார். 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை முத்துவேலன் மற்றும் சிறுவர்கள் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் முத்துவேலன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கீழவளவு போலீஸில் சத்யா புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடினர்.
இதற்கிடையில் சிறுவனின் வீட்டுக்கு அருகில் 3 வீடுகளை கடந்து பாழடைந்த ஓட்டு வீட்டுக்குள் அவன் இறந்து கிடப்பது நேற்று காலை தெரிய வந்தது. தகவலறிந்த கீழவளவு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். மோப்ப நாய் சோதனை நடைபெற்றது. அச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
போலீஸார் கூறுகையில், ‘ஆடையுடன் கிடந்த சிறுவனின் உடலில் பெரியளவில் வெளிப்படையான காயங்கள் இல்லை. ஒருவேளை பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. முத்துவேலனுடன் விளையாடச் சென்ற சிறுவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.