க்ரைம்

சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் நெல்லையைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை, வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜனின் மகள் வர்ஷினி (22).

இவர் சேலத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சக தோழியுடன் கல்லூரி அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்தார்.

அவருடன் தங்கியிருந்த மாணவி ஊருக்குச் சென்று விட்டு நேற்று காலை அறைக்கு திரும்பியபோது, வர்ஷினி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இரும்பாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் சம்பவ இடம் வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் வர்ஷினியின் தந்தை வரதராஜன் மகளை பார்க்க சேலம் வந்து அவருடன் தங்கியிருந்து விட்டு சென்றுள்ளார்.

மேலும், திருமணமான சித்த மருத்துவருடன் வர்ஷினி பழகி வந்துள்ளார். இதுசம்பந்தமாக வர்ஷினிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வர்ஷினி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மாணவி மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், அவரது கை நீல நிறமாக மாறியுள்ளதால், அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் கண்டறிய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸார் நெல்லையில் உள்ள மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT