முகமது சமீர்
சென்னை: தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் அங்கித் திலிப்மோர் (27). இவர்தனது அக்காவின் கணவர் நடத்தி வரும் தங்கம் உருக்கும் மற்றும் தங்கத்தின் தரத்தை சோதனை செய்யும் கடையை நிர்வகித்து வருகிறார்.
அந்த கடை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி காலை வாடிக்கையாளர் ஒருவர் 1.5 கிலோ தங்க நகைகளை உருக்கிக் கொடுக்கும்படி கடையில் ஒப்படைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி, அங்கித் மற்றும் கடை ஊழியர்கள் தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக தயாரித்து வைத்திருந்தனர்.
அன்று மதியம் 3 பேர் கொண்ட முகமூடி கும்பல் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி அங்கித் மற்றும் அங்கிருந்த 3 ஊழியர்களை தாக்கி 1.5 கிலோ தங்கக் கட்டியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.
அப்போது அங்கித், சக ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்கள் உதவியுடன் தப்பி ஓடியவர்களில் ஒருவரை விரட்டிப்பிடித்தார். மற்ற இருவரும் தங்கக் கட்டியுடன் தப்பினர்.
பிடிபட்ட நபர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற அருண் (23) என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளிகளான யானைக்கவுனி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் (24), அதே பகுதியைச் சேர்ந்த ஹேராம் என்ற ரமணா (24) ஆகிய மேலும் இருவரை கைது செய்தனர்.
இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டுக் கொடுத்து மூளையாக செயல்பட்ட மண்ணடி அய்யர் தெருவைச் சேர்ந்த முகமது சமீர் (26) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், அவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.