கோப்புப் படம்
பொன்னேரி: மீஞ்சூர் அருகே மின்சார ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களின் பரிசோதனையின் போது, ரயிலில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில் நேற்று காலை சென்னையிலிருந்து, கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது, தனேஷ்குமார், ஹேமந்த்,கணேஷ் ஆகியோர் அடங்கிய டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர் ஏறினர்.
ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு டிக்கெட் பரிசோதகர், பயணச்சீட்டுச் சரிபார்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, உரிய பயணச்சீட்டு இல்லாமல் ஒரு நபர் பயணம் செய்தது தெரிய வந்தது. அவரிடம் டிக்கெட் பரிசோதகர், அபராதத் தொகையை வசூலிக்க முயன்றபோது, அவர் அபராதம் செலுத்த மறுத்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த நபர் ரயிலில் இருந்து குதித்து காயமடைந்தார். இதுகுறித்து, தகவலறிந்த எண்ணூர் ரயில்வே பாதுகாப்பு படையினர், சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடையில் இருந்த சில பயணிகள், டிக்கெட் பரிசோதகர்கள்தான் அந்த நபரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாகத் தவறாக எண்ணி, அவர்களைத் தாக்க முயன்றனர்.
பணியில் இருந்த எண்ணூர் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ரவி, உடனடியாக டிக்கெட் பரிசோதகர்களை முன்பதிவு அலுவலகத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து, 10 பயணிகள் முன்பதிவு அலுவலகத்துக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்தனர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.