திருச்சி மாவட்டம் அதவத்தூரில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள போதை மறுவாழ்வு மையம்.
திருச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, மறுவாழ்வு மைய நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார்(50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது சகோதரரான விஜய குமார்(48) மதுவுக்கு அடிமையானதால், அவரை திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் உள்ள ஜெய்த்ரா அறக்கட்டளை குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 8-ம் தேதி சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் விஜயகுமாரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அவரது சகோதரர் முத்துகுமாரிடம், போதை மறுவாழ்வு மைய நிர்வாக இயக்குநர் மணிகண்டன் கடந்த 10-ம் தேதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, முத்துகுமார் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, விஜயகுமாரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துகுமார் அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மைய நிர்வாக இயக்குநரான உறையூர் பாண்டமங்கலம் த.மணிகண்டன்(50), நம்பர் 1 டோல்கேட்டைச் சேர்ந்த வார்டன் சீ.மணிமாறன்(29), பணியாளர்கள் அதவத்தூர் மு.பெரியசாமி(34), லால்குடி ம.கிருஷ்ணமூர்த்தி(30), அப்பணநல்லூர் ப.சூர்யபிரகாஷ் (28), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செ.அறிவுமணி(45), திருவையாறு ம.அபிஷேக்(27) ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை தாக்கியது தெரியவந்தது.
இந்நிலையில், விஜயகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, மறுவாழ்வு மைய இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ், ஜீயபுரம் டிஎஸ்பி கதிரவன் ஆகியோர் விசாரணை நடத்தி, போதை மறுவாழ்வு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.