வெங்கடேசன்
சென்னை: திருமங்கலம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ரவி(46). இவர் முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணாநகர், 2-வது பிரதான சாலை ‘என்’ பிளாக்கில் உள்ள எஸ்.ஆர்.எஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
அங்கிருந்த ஆயுர்வேத மருத்துவர் பெரம்பூர் பட்டேல் சாலையைச் சேர்ந்த வெங்கடேசன்(42), ரவிக்கு சில ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். அந்த மருந்தால் ரவிக்கு, முதுகு வலி சரியாகவில்லை. மாறாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உண்மையிலேயே மருத்துவம் படித்துள்ளாரா? என்ற சந்தேகம் ரவிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பம் மாதம் இந்திய மருத்துவக் கழக ஆணையத்திடம் மருத்துவர் வெங்கடேசன் மீது ரவி அடுத்தடுத்து புகார் அளித்தார். ஆனால், அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த ரவி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக வழக்கறிஞர் மூலம் இந்திய மருத்துவக் கழக ஆணையகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து, அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை மருத்துவக் குழுவினர், எஸ்.ஆர்.எஸ். ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வரும் வெங்கடேசன் ஆயுர்வேத மருத்துவம் படிக்காதது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் துறை அதிகாரி கண்ணன் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைதான வெங்கடேசன் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கி, மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் சிகிச்சை பெற்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார்விசாரித்து வருகின்றனர்.