சென்னை: சென்னை போரூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், மணப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், ஆற்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த ராம் (29) என்பவர், அந்தப் பெண் மற்றும் சக பெண் ஊழியர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை ஆபாசமாக சித்தரித்து தனது மடிக்கணினியில் சேமித்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராமின் மடிக்கணிகளை சோதனை செய்ததில் அவற்றில் பல பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர் இதை ஒரு பழக்கமாக, படங்களை சேமித்து பார்த்து ரசித்து வந்துள்ளார். இதையடுத்து, ராமை போலீஸார் கைது செய்தனர். 2 மடிக்கணினிகள், ஒரு ஐபோனை பறிமுதல் செய்தனர்.