ராஜகோபாலன்
சென்னை: கடன் செலுத்தாததால் ஜப்தி செய்யப்படவிருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கடலூரைச் சேர்ந்தவர் தீபக் (29). இவர், கடந்த 2024-ம் ஆண்டு சென்னையில் வாடகைக்கு வீடு தேடி கொண்டிருந்தார்.
அப்போது, முகப்பேர் மேற்கு, வள்ளலார் தெருவைச் சேர்ந்த ராஜகோபாலன் (59) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர், முகப்பேர், பன்னீர் நகரில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளதாகவும், அந்த வீட்டை ரூ.20 லட்சத்துக்கு குத்தகைக்கு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரூ.20 லட்சத்துக்கு கு்த்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தீபக் பணத்தை ராஜகோபாலனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, 2024 ஜூன் மாதம் முதல் குத்தகைக்கு வசித்துள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து வீட்டை காலி செய்து ஒப்படைக்கும்படி ஜப்தி நோட்டீஸ் வந்துள்ளது.
அதாவது, ராஜகோபாலன் 2017-ம் ஆண்டு அந்த வீட்டை தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, சுமார் ரூ.78 லட்சத்துக்கு கடன் பெற்று கடனை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் ராஜகோபாலனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தவில்லை.
நிதி நிறுவனம் வீட்டை ஏலத்தில் விட்டு, ஏலத்தில் எடுத்த நிறுவனம், நீதிமன்றம் மூலம் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜகோபாலன் வெளியேற்றப்பட்டார். பின்னர், தான் கொடுத்த குத்தகை பணத்தை திரும்ப கொடுக்கும்படி தீபக் கேட்டுள்ளார்.
ஆனால், ராஜகோபாலன் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்தள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, தீபக் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், புகார் உண்மை என தெரியவந்ததையடுத்து, ராஜகோபாலனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.