நாகர்கோவில்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றியதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்ட சிலர் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின்பேரில் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதில், கன்னியாகுமரி மாதவபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமார் மகன் சந்தோஷ்(31) என்பவர், மகாதானபுரத்தில் தனியார் ஏஜென்சி நடத்தி, துபாயில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து, 130 பேரிடம் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பெற்றது தெரியவந்தது.
மேலும், பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்பாமலும், சிலரை விசிட்டிங் விசாவில் வெளிநாட்டுக்கு அனுப்பி ஏமாற்றியதும் தெரியவந்தது.
மதுரையில் பதுங்கல்... இவ்வாறு 130 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு ரூ.1.50 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து, மதுரையில் பதுங்கியிருந்த சந்தோஷை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக குமரி எஸ்.பி. ஸ்டாலின் கூறும்போது, “புகார் பெற்ற 24 மணி நேரத்துக்குள் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமோ அல்லது அவரது நிறுவனத்திலோ யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால், குமரி மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 94981 96976 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மைத் தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 70103 63173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.