ஊட்டி: பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 42 வயது பெண் ஒருவர் அங்குள்ள பானிபூரி கடையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார்.
அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி கீழ்தலையாட்டு மந்து பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.