மணி
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் தந்தை இறந்த காரணத்தால் அவரது தாய் மணி (38) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். மணி இரவில் தாய் உறங்கிய பிறகு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2020-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையில், மணி மீதான குற்றங்கள் நிரூபணமாகின.
இதையடுத்து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி நேற்று தீர்ப்பு அளித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை மணிக்கு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ், 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இத்தண்டனைகளை ஏக காலத்தில் மணி அனுபவிக்க வேண்டும் எனவும், அவர் வாழ்நாள் முழு மையும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் தன் தீர்ப்பில் நீதிபதி உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். ஜாமீனில் இருந்து வந்த மணி, தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார். ஆகவே மணியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.