வீட்டினுள் பொருட்கள் சிதறி கிடந்தன.

 
க்ரைம்

‘ஒரு ரூபாய் கூட இல்லை... எதற்கு சிசிடிவி கேமரா?’ - நெல்லையில் திருட்டு நடந்த வீட்டில் கிடைத்த கடிதம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ‘உன் வீட்டில் ஒரு ரூபாய்கூட இல்லை, எதற்காக இத்தனை சிசிடிவி கேமராக்கள்’ என்று திருட சென்ற இடத்தில் திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் (57). கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையிலுள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்குமுன் ஜேம்ஸ்பால் தனது மனைவியுடன் மதுரைக்கு சென்றார்.

அங்கிருந்து தனது செல்போன் மூலம் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை கண்காணித்தார். அப்போது கேமராக்கள் செயல்பட்டன. ஆனால் நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது அந்த கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ்பால், அருகிலுள்ள வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரையிலிருந்து திருநெல்வேலி வந்த ஜேம்ஸ்பால் தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த உண்டியல் மற்றும் பர்ஸ் ஆகியவற்றில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

பேட்டை போலீஸார் அங்குவந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களால் தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அப்போது வீட்டின் அறையில் ஒரு கடிதம் கிடந்தது.

அதில், ‘உன் வீட்டில் ஒரு ரூபாய்கூட இல்லை, இதற்கு இத்தனை கேமராவா?. அடுத்தமுறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும்.

இப்படிக்கு திருடன்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT