

வெற்றிக் கோப்பையுடன் திருநங்கை ரஃபியா.
நாகப்பட்டினம்: கம்போடியாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் மெஜஸ்டிக் உலக அழகிப் போட்டியில் 3-ம் இடம் பிடித்த நாகூரை சேர்ந்த திருநங்கைக்கு பாராட்டு குவிகிறது. நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த விவசாயி முத்துக் கிருஷ்ணன்- தமிழரசி தம்பதிக்கு பிறந்தவர் ரஃபியா(30).
ஆணாக பிறந்த இவர் 9-ம் வகுப்பு பயின்றபோது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தன்னை திருநங்கையாக மாற்றிக் கொண்டு கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் வளர்ந்தார். அப்போது அழகுக் கலையில் ஆர்வம் எழவே, பெங்களூருவில் பியூட்டிஷியன் படித்து, அங்கு 2 ஆண்டுகள் பணி செய்து இந்தி, கன்னடம், ஆங்கில மொழிகளை கற்றுக் கொண்டார்.
அதன்பின், பாக்சர், ராமாச்சார்ய ஆகிய கன்னட திரைப்படங்களில் திருநங்கையாக நடித்த ரஃபியாவுக்கு மாடலிங் மேல் கவனம் திரும்பியது. 2018-ல் புனேவில் நடைபெற்ற மிஸ் புனே அழகிப் போட்டியில் முதலிடம் பெற்றார். அதன்பின், இந்தியா அளவிலான திருநங்கை அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்று மிளிர்ந்தார்.
இதனிடையே இம்மாதம் 13-ம் தேதி கம்போடியாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் மெஜஸ்டிக் உலக அழகிப் போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா, துருக்கி, மொராக்கோ, கஜகஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ரஃபியா கடும் தேர்வுக்கு பின்னர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தார்.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடை, உடை, பாவனை மற்றும் சமூக பொறுப்பு உள்ளிட்ட கேள்விகளில் முதல் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகியும், 2-ம் இடத்தை கம்போடியா அழகியும், 3-ம் இடத்தை ரஃபியாவும் பிடித்தனர். 3-ம் இடம் பிடித்த ரஃபியாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.