க்ரைம்

சென்னையில் வசித்த தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல் - நெல்லூர் அருகே பத்திரமாக மீட்பு

தெலங்கானாவில் ரூ.6 கோடி கடன் வாங்கிவிட்டு குடும்பத்துடன் தப்பியவர்

செய்திப்பிரிவு

தெலங்கானாவில் ரூ.6 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் குடும்பத்துடன் சென்னைக்கு தப்பிய தொழிலதிபர், காரில் கடத்தப்பட்டார். நெல்லூர் அருகே காரை மடக்கிய போலீஸார், தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் கே.வி.ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா (57). தொழிலதிபரான இவர் தெலங்கானாவில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அங்கு பலரிடம் ரூ.6 கோடிக்கு மேல் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வாங்கிய கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆனால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார். வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் 1-வது பிரதான சாலை அன்பு நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மதியம் வீட்டு வாசலில் நின்றிருந்தார் ரவீந்திர கவுடா. அப்போது, நம்பர் பிளேட் இல்லாத காரில் முகமூடி அணிந்து வந்த கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மகள் பிரசன்ன லட்சுமி, தந்தை கடத்திச் செல்லப்படுவதைக் கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பியது.

இதுகுறித்து பிரசன்ன லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். கடன் கொடுத்தவர்கள்தான் அவரை தெலங்கானாவுக்கு கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகித்த போலீஸார், தனிப்படை அமைத்து அவரை தேடினர். உடனடியாக தெலங்கானா, ஆந்திரா மாநில போலீஸை தொடர்பு கொண்டு, சுங்கச்சாவடியிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், நெல்லூர் சுங்கச்சாவடியில் அந்த காரை மடக்கிய போலீஸார், காரில் கடத்தி வரப்பட்ட தொழிலதிபர் ரவீந்திர கவுடாவை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தெலங்கானாவை சேர்ந்த மோதிபாபு (45), வைகுண்டம் (41), பீம்ரெட்டி நாகராஜு (35), ஸ்ரீகாந்த் (30), பீரித்தம்குமார் (36), விராட் ஜெய்ஸ்வால் (38) ஆகிய 6 பேரை கைது செய்த போலீஸார், கோயம்பேடு போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். ரூ.6 கோடி கடனை திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவானதால், ரவீந்திர கவுடாவை அவர்கள் கடத்திச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT