திருச்சி: தமிழகத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சர்வதேச அளவில் முக்கிய புள்ளியான வேதாரண்யத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) திருச்சியில் கைது செய்தனர்.
இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாகை மாவட்டத்தில் ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக என்சிபி பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், லாரியை வழிமறித்த என்சிபியினர் அந்த லாரியில் இருந்து 661.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வேதாரண்யத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமதாஸ் (என்கிற) கருத்தபாண்டி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர் என்பதும், கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில் ராமதாஸ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனிடையே, போதைப்பொருள் இல்லாத இந்தியா (நஷா முக்த் பாரத்) என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, போதைப்பொருள் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் உறுதியான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில், நாகையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ராமதாஸ் (என்கிற) கருத்தபாண்டி சிங்கப்பூரில் இருப்பது கண்டறியப்பட்டது.
சர்வதேச ஒத்துழைப்புடன் அவரது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்.19-ம் தேதி அவர் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது என்சிபியால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.