

கோப்புப் படம்
மதுரை: போர் காரணமாக ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த 650 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பாலைக்குடியைச் சேர்ந்த எனது உறவினர் முகேஷ் (26) உட்பட பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக சில மாதங்களுக்கு முன்பு ஈரான் சென்றனர்.
ஈரானில் தற்போது போர் நடந்து வருவதால் அங்குள்ள மீனவர்கள் இ-ஜீரோ துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்ட சூழலில் உள்ளனர்.
போர் பதற்றம் காரணமாக மீனவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. சுற்றிலும் பீரங்கி தாக்குதல், வான்வழி தாக்குதல்கள் நடந்து வருவதால் உயிர் பயத்தில் உள்ளனர்.
ஈரானில் கடலோரப் பகுதிகளும், துறைமுகப் பகுதிகளும் போர் காரணமாக பாதுகாப்பாற்ற இடங்களாக மாறிவிட்டன. ஈரான் நாட்டில் 700-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
எனவே மீனவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் ஈரானில் இருந்து 650 இந்திய மீனவர்கள் ஏப். 4-ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 283 பேர் தமிழக மீனவர்கள் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், போர்ச் சூழலில் ஈரானில் தவித்த இந்திய மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வந்ததற்காக மத்திய அரசுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மாநில அரசுக்கும் நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.