தென்காசி: ரயில்வே ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த கேரள இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட் கீப்பராகப் பணியாற்றிய பெண் ஊழியர் கடந்த 2023 பிப். 16-ம் தேதி இரவு பணியில் இருந்தார்.
அப்போது, அவரது அறைக்குள் அத்துமீறி புகுந்த இளைஞர் ஒருவர், ரயில்வே பெண் ஊழியரைத் தாக்கி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட்டதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். ரயில்வே பெண் ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகாரின் பேரில் தென்காசி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாவூர்சத்திரம் பகுதியில் வேலை செய்து வந்த, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், வாழவிழா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (27) என்பவர், ரயில்வே ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பி.ராஜவேலு, குற்றம் சுமத்தப்பட்ட அனீஷுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜராகினார்.