

மோகன்ராஜ்
புதுக்கோட்டை: பஜ்ரங்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி புதுக்கோட்டையில் நேற்று கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் குட்ஷெட் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (38).
பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்டப் பொறுப்பாளர். இந்நிலையில், மோகன்ராஜ், தாயார் சுசீலா, மனைவி சூர்ய பிரியா ஆகியோர் நேற்று வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டுக்கு வந்த ஒருவர் சுசீலாவிடம் மோகன்ராஜின் நண்பர் என்றும், கோவையில் இருந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், வீட்டின் வாயிலில் அந்த நபருடன் மோகன்ராஜ் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன்ராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த திருக்கோகர்ணம் போலீஸார், மோகன்ராஜின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலை செய்தவர் யார், அவருடன் வேறு யாரும் வந்தார்களா, கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையாளியைக் கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மோகன்ராஜின் உறவினர்கள், திருக்கோகர்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.