க்ரைம்

ஐ.டி. பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்: ஜார்க்கண்ட் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: காருக்காக அதிகாலையில் சாலையில் காத்திருந்த ஐ.டி. பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி, கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்துவருகிறார்.

இவர் புத்தாண்டைக் கொண்டாட சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினார். புரசைவாக்கம் தாசபிரகாஷ் பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்து தான் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்ல செயலி மூலம் கார் புக் செய்து காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், அந்த ஊழியரின் அருகே சென்று பேச்சுக் கொடுத்தார். பின்னர் திடீரென அவர் மீது பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத ஐ.டி. ஊழியர் அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து தாக்கினர்.

கீழே விழுந்து கை உடைந்தது: பின்னர், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், பிடிபட்ட இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் யாதவ் (35) என்பதும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மாஸ்டராக பணி செய்து வருவதும் தெரியவந்தது.

விசாரணையின் இடையில் பிரமோத் யாதவ், கழிப்பறை செல்லும்போது கீழே விழுந்ததால் கை உடைந்தது. பின்னர் அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT