சென்னை: விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பயணியிடம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை பறிக்கப்பட்டது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால் (23).
விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கோவையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வரவுள்ள பெண்பயணியிடம் ஒரு பார்சலை வாங்கிக் கொண்டு செல்வதற்காக, விமான நிலையத்தில் காத்திருந்தார்.
அந்த பெண் வந்ததும், இருவரும் விமான நிலைய டெர்மினல்-1 போர்டிகோ பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபர், அவர்களை நிறுத்தி, ‘நான் சுங்கத் துறை அதிகாரி, நீங்கள் வைத்திருக்கும் பார்சலில் தங்க நகை இருப்பதால் விசாரிக்க வேண்டும்’ எனக்கூறி, பார்சலை வாங்கிக் கொண்டு, பின் தொடர்ந்து வருமாறு கூறி வேகமாக நடந்து சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபர் மாயமாகிவிட்டார்.
அந்த பார்சலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நெக்லஸ் இருந்ததால் நந்தகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சுங்க அதிகாரிகள் ஆகியோரிடம் தெரிவித்தார்.
உடனே சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுடைய அலுவலகத்தில் விசாரித்ததில், அதிகாரிகள் யாரும் பயணியிடம் இருந்து பார்சலை பெறவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து அவர் சென்னை விமான நிலைய போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.