சந்தேகத்துக்குரிய இளைஞரின் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார்.
மதுரை: மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது, அதே பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்கப் போன போலீஸார், நபர் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை பைபாஸ் சாலை நேரு நகரில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக் கடையில் நேற்று முன்தினம் அதிகாலை ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 5 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடக்கிறது.
அதிகாலை 3.34 மணிக்கு சம்பந்தப்பட்ட நகைக்கடை அருகில் இருந்து ஹெல்மெட், முகமூடி அணிந்து ஸ்கூட்டரில் நேரு நகருக்குள் கொள்ளையன் சென்ற வீடியோ காட்சிகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட இளைஞர் குறித்து விசாரணை நடந்தது.
இது குறித்து தனிப்படையினர் தரப்பில் கூறியதாவது: சந்தேகப்பட்ட இளைஞர் குறித்து விசாரித்தபோது அவர் பலமுறை அதே நகைக்கடைக்கு நகை வாங்குவதுபோல் வந்து சென்றுள்ளார். பல டிசைன் நகைகளை தேர்வு செய்து, வாங்காமலேயே அடிக்கடி திரும்பியுள்ளது அங்குள்ள கேமராவில் தெரிந்தது.
பல வண்ண உடைகளில் வந்த இளைஞர் ஒரே தொப்பியை மட்டும் தினசரி அணிந்து வந்துள்ளார். இந்த தொப்பிதான் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை உறுதிப்படு்த்தியதில் 21 வயது இளைஞரின் பெயர் நிஷாந்த் எனவும், நகைக்கடைக்கு அருகேயுள்ள தெருவில் வசிப்பதும் இன்ஸ்ட்ராகிராமில் தீவிரமாக இருந்துள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து, துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார். அந்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்தனர். இதை அறிந்த நிஷாந்த் அங்கிருந்து தப்பினார். அவர் சென்னைக்கு சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடி தனிப்படை சென்னை விரைந்துள்ளது. வீடு, அவர் வசிக்கும் தெரு உள்ளிட்ட சந்தேகிக்கும் இடங்களில் நகையை பதுக்கி வைத்துள்ளாரா என போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கொள்ளையனை அடையாளம் கண்டும், உடனே கைது செய்து நகைகளை மீட்க முடியாததால் போலீஸ் ஏமாற்றம் அடைந்தனர்.