க்ரைம்

மதுரை பெண் அளித்த புகாரில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: மதுரையை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய புகாரை அடுத்து, திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் (42) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையை சேர்ந்த 30 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது திருநெல்வேலி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அருண்குமார், மானூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். தற்போது அவர் வீரநல்லூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த 30 வயது பெண்ணுடன் பேசுவதை அருண்குமார் தவிர்த்து விட்டதாகவும், அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து அப்பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து அருண்குமார் மீது புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.

அதில், தன்னை இன்ஸ்பெக்டர் அருண்குமார் திருமணம் செய்வதாக கூறி பயன்படுத்தி விட்டு, தற்போது ஏமாற்றிவிட்டார் என்று புகார் கூறியிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் அருண்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீது திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, பெண்ணை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, திருநெல்வேலி சரக டிஐஜிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT