க்ரைம்

கைவிடப்படும் நகை திருட்டு வழக்குகளில் புகார்தாரருக்கு அரசு இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால், புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த சுஜா சங்கரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என் வீட்டை உடைத்து 75 பவுன் நகை மற்றும் ரூ.1.39 லட்சம் ரொக்கம் 2015 நவம்பரில் திருடப்பட்டது. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 9 ஆண்டுகள் கடந்தும், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.

இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு, என் வீட்டில் நடைபெற்ற நகை திருட்டு வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி, வழக்கை கைவிடுவதாக நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் எனக்கு தெரிவிக்கவில்லை. எனவே, நகை, பணம் திருட்டு வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடப்பட்ட நகைகளை மீட்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ‘நகை திருட்டு வழக்குகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கண்டுபிடித்து தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கலாகி வருகின்றனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நகை திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்கின்றனர்.

இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸார் அறிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பில் 30 சதவீதத் தொகையை புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT