கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் விக்ரமன். ஒரு வாரத்துக்கு முன்புதான் பொறுப்பேற்றுள்ளார். இவர், பள்ளியில் பயிலும் 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடமும், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், தலைமையாசிரியர் விக்ரமனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளமதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவிகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த விக்ரமனை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.