சென்னை: பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சக ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அலுவலகம் ஒன்றில் ஆந்திராவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஜிஎஸ்டி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஜிஎஸ்டி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சவுரவ் தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி அந்தப் பெண் ஆய்வாளருக்கு தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளர், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சவுரவ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.