தினேஷ்
சென்னை: பெண் தொழிலதிபரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாக ஜிம் மாஸ்டர் கைது செய்யப்பட்டார். பாடி பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தும் பெண் (41) ஒருவர், கணவரைப் பிரிந்து அதே பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2024-ல் தனது வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றபோது, வேளச்சேரியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் தினேஷுடன் (36) அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை தவிர்த்து வந்தார். ஆனாலும், தினேஷ் அவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 18-ம் தேதி திருமங்கலம் பகுதியில் காரில் சென்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ் வழிமறித்துள்ளார்.
கீழே இறங்குமாறு கூறி, அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.