பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி ஆசிரியர்கள் அடித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வால்பாறை ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த மாதம் 10-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
உருவ கேலி செய்தனர்... அதில், “பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவிகள், படிக்காத மாணவிகள் என பிரித்து அமரச் செய்கின்றனர். நான் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி, படிக்காத மாணவிகளுடன் அமரச் செய்தனர். மேலும், உருவ கேலியும் செய்தனர்.
சரியாகப் படிக்கவில்லை என்று கூறி ஆசிரியர்கள் என்னை அடித்தனர். பெற்றோரிடம் புகார் தெரிவித்து விடுவதாக கூறியதால், மனமுடைந்த நிலையில் வீட்டுக்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டேன்” என்று மாணவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமாலா, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று மாணவி படித்து வந்த ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.